கர்நாடகத்தில் ரூ.93 கோடியில் செயற்கை மழை திட்டம்


கர்நாடகத்தில் ரூ.93 கோடியில் செயற்கை மழை திட்டம்
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 28 May 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ரூ.93 கோடி செலவில் செயற்கை மழை திட்டத்தை அமல்படுத்த மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பெங்களூரு, 

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

ராய்ச்சூரில் பல்கலைக்கழகம் தொடக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, ராய்ச்சூர் மற்றும் யாதகிரியில் புதிதாக பல்கலைக்கழகம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.

கார்கலா நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் குழாய் அமைக்கப்பட்டது. அதை மேம்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அம்ருத் திட்டத்தின் கீழ் மைசூரு நகருக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். மத்திய அரசு கூறியபடி நிதியை ஒதுக்கவில்லை. அதனால் மாநில அரசே அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சி துறையில் 453 காலியிடங்கள் நிரப்பப்படும். கதக்கில் மாணவர்கள் தங்கும் விடுதி கட்ட ரூ.22 கோடி டெண்டருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ரூ.522 கோடி செலவில் விஸ்வேசுவரய்யா கால்வாய் சீரமைக்கப்படும். இதனால் விவசாயிகளுக்கு சரியான முறையில் நீர் கிடைக்கும். செயற்கை மழை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக ரூ.78 கோடி செலவில் டெண்டர் விட அனுமதிக்கப்பட்டது. ஆனால் ரூ.93 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு மந்திரிசபையில் அனுமதி வழங்கப்பட்டது.

உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலியால் தாலுகாவில் 91 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் நோட்டா வசதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

Next Story