பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளில் 61 குழுக்கள் மூலம் நிவாரண பணி
பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆய்வு செய்தார். பின்னர், அவர் மழை பாதித்த பகுதிகளில் 61 குழுக்கள் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன என்று கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கடந்த 2 நாட்களில் பெங்களூரு நகரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் போது பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் கார், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை சேதமடைந்தன. மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் துணை முதல்-மந்திரியும், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் ஏற்பட்ட மழை சேதங்களை நேற்று பார்வையிட்டார். பெங்களூரு விஜயநகர், மல்லேசுவரம், வெஸ்ட்ஆப் கார்டு ரோடு பகுதிகளில் மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் ஆகியோருடன் சேர்ந்து ஆய்வு செய்த பரமேஸ்வர், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார். அத்துடன் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணியை முடுக்கிவிட்டார்.
பின்னர் பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களாக பெங்களூரு நகரில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. 500-க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்துள்ளன. சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது. மழையால் முறிந்த மரங்களை அப்புறப்படுத்துவது, மின்சார துண்டிப்பை சரிசெய்வது போன்ற நிவாரண பணிகளை விரைந்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிவாரண பணியில் பெங்களூரு மாநகராட்சி, பெஸ்காம் மின்வாரியம் உள்பட பிற துறைகளை சேர்ந்த 61 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
பெங்களூரு உதவி மையத்தை தொடர்பு கொண்டு மழை சேதங்கள் குறித்து பொதுமக்கள் புகாராக பதிவு செய்யலாம். மழை பாதிப்புகளை முன்னெச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். இந்த முன்னெச்சரிக்கையால் பெரும் அளவில் சேதங்கள் ஏற்படவில்லை.
மரங்கள் விழுவதால் கேபிள் வயர்கள் அதிகளவில் துண்டிக்கப்படுகிறது. இன்னும் 2 மாதங்களில் கேபிள் வயர்கள் பூமிக்கடியில் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story