மதுவில் விஷம் கலந்து கொடுத்து விவசாயி கொலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மனைவி புகார்
மதுவில் விஷம் கலந்து கொடுத்து விவசாயி கொலை செய்யப்பட்டதாக அவருடைய மனைவி உறவினர்களுடன் வந்து திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
திண்டுக்கல்,
வடமதுரை அருகேயுள்ள அய்யலூரை அடுத்த வேங்கனூரை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. விவசாயி. இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது45). இவர் நேற்று தனது உறவினர்களுடன் வந்து, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ஆண்டிச்சாமி கடந்த மாதம் 19-ந்தேதி அய்யலூர் சந்தைக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை காணவில்லை என்று 22-ந்தேதி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். இதற்கிடையே 24-ந்தேதி இறந்த நிலையில் எனது கணவரின் போட்டோ, எனது மகனின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் வந்தது.
அதை பார்த்ததும், திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரித்தோம். அப்போது திண்டுக்கல் பஸ் நிலையத்தில் எனது கணவர் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனே சாவில் சந்தேகம் இருப்பதாக நான் புகார் அளித்தேன். ஆனால், எனது புகார் தொடர்பாக விசாரணை நடத்தாமல், போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டனர்.
இந்த நிலையில் எனது மகன் சுரேசிடம், உறவினர் ஒருவர் செல்போனில் பேசினார். அப்போது மதுவில் விஷம் கலந்து கொடுத்து எனது கணவரை கொன்றதாக கூறி அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றியும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். உறவினர் பேசியதை பென்டிரைவில் பதிவு செய்து கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கணவர் மற்றும் உறவினரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story