தேனியில், 2 மாதத்துக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதத்துக்கு பிறகு, கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
தேனி,
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததன் காரணமாக கடந்த 2 மாதத்துக்கும் மேல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.
இருப்பினும் மக்களிடம் குறைகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெறுவதற்கு கலெக்டர் அலுவலகத்தில் தனியாக புகார்மனு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் மக்கள் மனுக்களை செலுத்தி வந்தனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்தால் திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து மனுக்கள் அளித்தனர். இதில் மொத்தம் 194 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், ஆண்டிப்பட்டி தாலுகா மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘மேக்கிழார்பட்டி, ஆவாரம்பட்டி, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி ஆகிய 4 ஊர்களை சேர்ந்த 250 பேருக்கு கடந்த 2002-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.
தற்போது வரை நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வில்லை. எனவே, விரைவில் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story