ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை விழா கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது


ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை விழா கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 28 May 2019 4:00 AM IST (Updated: 28 May 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை விழா கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், ஊட்டியில் ரோஜா கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி மற்றும் கோடை விழா கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

ஊட்டியில் நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க மலர் கண்காட்சி மற்றும் குன்னூரில் பழக்கண்காட்சி மட்டும் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா கலைநிகழ்ச்சிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கியது. கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக கடந்த 1-ந் தேதி கோடை விழா தொடங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஊட்டியில் 5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 1 லட்சத்து 62 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர். கோடை விழா கலைநிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு பூங்கா சாலையில் நைட் பஜார் மேடையில் நடத்தப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் நடத்தப்படவில்லை. இன்று(நேற்று) முதல் கலைநிகழ்ச்சிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெறுமனே திரும்பி செல்லாமல், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடக்கும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்து செல்லும் பொருட்டு நடத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளதை உணர்ந்து, சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது. குன்னூர் அருகே பல இடங்களில் சுற்றுலா பயணிகள் உணவருந்தி விட்டு, குப்பைகளை தொட்டியில் போடாமல் அப்படியே விட்டு சென்று உள்ளனர். இது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது.

ஊட்டியின் அழகை பாதுகாத்தால் தான், தொடர்ந்து ஆண்டுதோறும் காலநிலை மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியும். எனவே, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை விளக்கும் வகையில் பரதநாட்டியம், கர்நாடகா மாநிலத்தின் தொள்ளு குனிதா நடனம், கேரள மாநிலத்தின் திருவாதிரை களி நடனம், தெலுங்கானா மாநிலத்தின் மாதிரி நடனம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் நடனம் ஆடினார்கள். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு, தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்நிகழ்ச்சியில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story