ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு
ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஊட்டி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. அதற்கு பதிலாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போடும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வழக்கம்போல் நேற்று நடைபெற்றது. ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி மஞ்சூர் அருகே முள்ளிகூர் கொடமரம் காலனி பொதுமக்கள் சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொடமரம் காலனி பகுதியில் 65 குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அப்பகுதிக்கு அரசு மூலம் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் மண் சாலை அமைத்து கொடுக்கப்பட்டது. இந்த சாலை வழியாக படிப்பு, வேலை போன்றவற்றுக்கு பொதுமக்கள் சென்று வந்தார்கள். இதற்கிடையே மழைக்காலங்களில் மண் சாலை சேறும், சகதியுமாக மாறுவதால், நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாத நிலை உள்ளது. இதனால் சாலையை பயன்படுத்த இயலாத சூழ்நிலை காணப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணி இதுவரை தொடங்கப்பட வில்லை. இதற்கு காரணம் சாலை ஆரம்பிக்கும் பகுதியில் உள்ள 350 மீட்டர் தூரம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், வனத்துறையின் அனுமதி பெற்று சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. நுந்தளாமட்டம் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்,
கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு இந்திரா நகர். அப்பகுதியில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காட்சி அளிப்பதால், வாகனங்கள் செல்ல முடிவது இல்லை. பொதுமக்கள் நடந்து சென்று வர அவதிப்பட்ட வேண்டி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆகவே, பழுதடைந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story