கடலூரில், 17 டன் எடைகொண்ட இரும்பு நடைபாலம் தூக்கி நிறுத்தப்பட்டது
கடலூரில் 17 டன் எடைகொண்ட இரும்பு நடை பாலம் தூக்கி நிறுத்தப்பட்டது.
கடலூர்,
கடலூர் பாரதி சாலையில் புதுநகர் போலீஸ் நிலையம் முன்பு தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் காலை, மாலை நேரங்களில் சாலையை கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் நடை மேம்பாலம் அமைப்பதற்காக முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன் தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடியே 20 லட்சத்தை ஒதுக்கினார்.
இதையடுத்து நடை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சாலையின் இருபக்கமும் ராட்சத இரும்பு தூண்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இரும்பு தூண்களுக்கு மேல் இரும்பு நடைபாலம் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. சுமார் 17 டன் இரும்பினால் நடைபாலம் வடிவமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வடிவமைக்கப்பட்ட இரும்பு நடை பாலத்தை இரும்பு தூண்களில் தூக்கி நிறுத்தும் பணி நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்றது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கடலூர்-புதுச்சேரி, பண்ருட்டி-கடலூர் மார்க்கங்களில் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் கம்மியம்பேட்டை இணைப்பு சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. பின்னர் சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ராட்சத கிரேன் மூலம் 17 டன் எடையுள்ள இரும்பு நடை பாலத்தை சாலையின் குறுக்கே இரும்பு தூண்களின் மீது தூக்கி நிறுத்தப்பட்டது. அப்போது சில நிமிடங்கள் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் கவுதமன் ஆகியோர்பார்வையிட்டனர். அப்போது உதவி பொறியாளர் பாலாஜி, ஒப்பந்ததாரர் பஷீர் உல்லா, வீரமணி, அருள் மற்றும் மின்சாரத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, இரும்பினால் அமைக்கப்பட்டுள்ள நடை பாலம் 6½ மீட்டர் உயரம், 8 அடி அகலம், 63 அடி நீளம் உடையதாகும். இனி நடைபாலத்தின் மேற்பகுதியில் மேற்கூரை அமைக்க வேண்டும், சூரிய ஒளியில் இயங்கும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். இந்த பணிகள் முடிவடைய ஒருமாத காலம் ஆகும் என்றார்.
Related Tags :
Next Story