டி.என்.பாளையம் அருகே நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து 12 ஆடுகளை கடித்துக்கொன்ற சிறுத்தை விவசாயிகள் அச்சம்


டி.என்.பாளையம் அருகே நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து 12 ஆடுகளை கடித்துக்கொன்ற சிறுத்தை விவசாயிகள் அச்சம்
x
தினத்தந்தி 29 May 2019 4:15 AM IST (Updated: 28 May 2019 8:46 PM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து 12 ஆடுகளை சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர், தலமலை, கேர்மாளம், ஆசனூர், டி.என்.பாளையம், ஜீரகள்ளி, விளாமுண்டி, கடம்பூர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி, மான், உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

கோடை காலம் என்பதால் தற்போது பெரும்பாலான வனப்பகுதிகளில் மரம் செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகின்றன. இதனால் குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. சில நேரங்களில் சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் தோட்டத்தில் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கால்நடைகளையும் தனக்கு இரையாக்கி வருகிறது.

இந்த நிலையில் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட அடி மலை மாதையன் கோவில் அருகே உள்ள வேட்டுவன்புதூரை சேர்ந்தவர் ரவி (வயது 50). இவருடைய வீடு அருகே தோட்டம் உள்ளது. இங்கு அவர் ஆடு, மாடுகள் வளர்த்து வந்தார். தினமும் ஆடு, மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, தோட்டத்திலேயே கட்டி வைத்திருப்பார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் தோட்டத்தில் ஆடு, மாடுகளை கட்டி வைத்துவிட்டு ரவி தூங்க சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை ரவி தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது 11 ஆடுகள் கடித்து குதறி கொல்லப்பட்டு, உடல்கள் அங்கும் இங்குமாக ரத்த வெள்ளத்தில் சிதறி கிடந்தன. மேலும் ஒரு ஆட்டின் பாதி உடல் மட்டும் வேலி ஓரத்தில் கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் மனோஜ்குமார் அங்கு சென்று பதிவான கால்தடத்தை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால்தடம் என்பது உறுதியானது.

நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ரவியின் தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. பின்னர் அங்கு கட்டப்பட்டிருந்த 11 ஆடுகளை கடித்து குதறி அவற்றின் ரத்தத்தை குடித்துள்ளது. மேலும் ஒரு ஆட்டை மட்டும் கடித்து கொன்று தின்றுவிட்டு, அதன் பாதி உடலை மட்டும் அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி விவசாயிகள் அங்கு கூடிவிட்டனர். பின்னர் அவர்கள் இதுபற்றி கூறும்போது, ‘கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தை நாய்களை கடித்து தின்று விட்டு சென்றது. தற்போது மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி உள்ளது.

தொடர்ந்து இது போன்று நடந்து வருவதால் இந்த பகுதியில் குடியிருப்பதற்கே மிகுந்த அச்சமாக உள்ளது. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Next Story