ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மாநகராட்சி உதவி ஆணையாளரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை
கோவையில் ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான மாநகராட்சி உதவி ஆணையாளரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 32). இவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு சொத்துவரி கட்டுவதற்காக சொத்துவரி புத்தகம் வாங்க மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த புத்தகம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று உதவி ஆணையாளர் ரவிக்குமார் கேட்டு உள்ளார்.
லஞ்சம் கொடுக்க முடியாது என்று கூறிய குமாரிடம் இடைத்தரகர் பாலகிருஷ்ணன் பேசியதால் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முன்வந்தார். எனினும் லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமார், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை குமார், ரவிக்குமாரிடம் கொடுத்தார்.
உடனே அவர் அந்த பணத்தை இடைத்தரகர் பாலகிருஷ்ணனிடம் கொடுக்க கூறினார். அந்த பணத்தை பாலகிருஷ்ணனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அதுபோன்று லஞ்சம் கேட்ட உதவி ஆணையாளர் ரவிக்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் கோவையில் உள்ள உதவி ஆணையாளர் ரவிக்குமார் வீட்டில் சோதனை செய்தனர். அதில் சில முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உதவி ஆணையாளர் ரவிக்குமார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ரவிக்குமார், உதவி ஆணையாளர் ஆவார். உதவி ஆணையாளர் பொறுப்பில் இருப்பவர்களை பணியிடை நீக்கம், இடமாற்றம் செய்ய தமிழக நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு தான் அதிகாரம் இருக்கிறது. எனவே ரவிக்குமாரை கைது செய்தது தொடர்பான அறிக்கை அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்குள் நகராட்சி நிர்வாக ஆணையாளர் அலுவலகத்துக்கு சென்றுவிடும். அதன் பின்னர்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டால், அது தொடர்பான உத்தரவு சென்னையில் இருந்து கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு உடனடியாக வந்து சேரும். அந்த உத்தரவின் நகல் சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியாக வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story