உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற கள்ளக்காதலனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற கள்ளக்காதலனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தையை கொன்றது எப்படி? என்பது குறித்து கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சரவணம்பட்டி,
கோவை மாவட்டம் காரமடை வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ரூபினி (வயது 22). இவருடைய கணவர் பால்ராஜ். கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு தேவிஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ் (30) என்பவர் ரூபினியின் செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். அந்த எண் யாருடையது என ரூபினி மீண்டும் அழைத்து பேசினார்.
மறுமுனையில் தமிழ் பேசி உள்ளார். எதிர்முனையில் ஒரு பெண் பேசியதை கேட்ட தமிழ் தொடர்ந்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச தொடங்கினார். அப்போதுதான் ரூபினி கணவரை பிரிந்து தனியாக வசிப்பதை அறிந்து கொண்டார். இதை தனக்கு சாதகமாக்கி கொண்டு ரூபினியிடம் ஆசைவார்த்தை கூறினார்.
அவரது ஆறுதலான பேச்சில் ரூபினி மயங்கினார். முதலில் நட்பாக பேசி பழகிய அவர்களுக்குள் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகமானது. சில நாட்களில் 2 பேருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் இருக்கும்போது குழந்தை தேவிஸ்ரீ இடையூறாக இருப்பதாக கருதினர். எனவே அந்த குழந்தையை கொன்றுவிட வேண்டும் என்று இருவரும் திட்டமிட்டனர்.
தமிழ் மீதான கள்ளக்காதல் குழந்தையை கொலை செய்யும் அளவுக்கு ரூபினியை தூண்டியது. சம்பவத்தன்று சரவணம்பட்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தமிழும், ரூபினியும் உல்லாசம் அனுபவித்தனர். இந்த நேரத்தில் குழந்தை தேவிஸ்ரீயை கொன்று உடலை கரட்டுமேடு பகுதியில் தூக்கி வீசிவிட்டு தமிழ் தப்பி ஓடிவிட்டார். குழந்தையை காணவில்லை என்று நாடகமாடிய தாய் ரூபினி, போலீசின் தீவிர விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
தாய் ரூபினி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு எனது சொந்த ஊராகும். 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அவினாசி அருகே உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேலைசெய்தேன். அப்போது அந்த கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்த பால்ராஜுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலித்து திருமணம் செய்தோம். நான் கர்ப்பமான பிறகு கருத்துவேறுபாடு காரணமாக கணவர் என்னை பிரிந்து சென்றார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. எனக்கு குழந்தை பிறந்தது. நான் வெள்ளியங்காட்டில் உள்ள பெற்றோருடன் வசித்து வந்தேன். கூலி வேலைக்கும் சென்று வந்தேன்.
அப்போது எனக்கு செல்போனில் மிஸ்டு கால் கொடுத்ததின் மூலம் கோவில்பாளையத்தை சேர்ந்த தமிழ் என்பவர் அறிமுகமானார். அவர் சினிமா படப்பிடிப்புக்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு பில்லூரில் நடந்த படப்பிடிப்புக்கு வந்து இருந்தார். அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இந்த நிலையில் குழந்தையை அழைத்துக்கொண்டு வா நாம் கோவில்பாளையத்தில் குடும்பத்துடன் வசிக்கலாம் என என்னிடம் தமிழ் கூறினார். நான் குழந்தையுடன் சரவணம்பட்டிக்கு வந்து கரட்டுமேட்டில் தமிழை சந்தித்து கோவில் அருகில் நீண்டநேரம் பேசினோம்.
அப்போது, காதல் வாழ்க்கைக்கு குழந்தை இடையூறாக இருக்கும் என்பதால் குழந்தையை கொன்றுவிடலாம் என்று காதலன் தமிழ் என்னிடம் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன். பிறகு அவர் வாங்கி வந்த விஷத்தை தம்ளரில் ஊற்றி, பிஸ்கட்டை அதில் நனைத்து குழந்தைக்கு கொடுக்குமாறு கூறினார். எனக்கு மனமில்லாததால் தமிழே பிஸ்கட்டை ஊட்டிவிட்டார். குழந்தை ஒரு பிஸ்கட் மட்டும் சாப்பிட்டது. பிறகு நானும் ஒரு பிஸ்கட்டை விஷத்தில் நனைத்து ஊட்டினேன். சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்தது.
பிறகு குழந்தையை கிரிவல பாதையில் படுக்க வைத்துவிட்டு கோவில் அருகில் சென்று இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். சிறிதுநேரம் கழித்து, குழந்தையை பார்த்துவிட்டு வருவதாக கூறிச்சென்ற தமிழ், குழந்தை இறந்ததை அறிந்ததும் அங்கிருந்து ஓடிவிட்டார். தமிழ் வருவார் என்று நான் நீண்டநேரம் காத்திருந்தேன். வராததால் குழந்தை கிடந்த பகுதிக்கு சென்றேன். அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே நின்று அழுதேன். குழந்தையை யாரோ கடத்திச்சென்றுவிட்டதாக நாடகமாட நினைத்திருந்தோம். அதற்குள் நான் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தப்பி ஓடிய கள்ளக்காதலன் தமிழை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அவர், பில்லூர் பகுதியில் நடமாடி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் தேடுதல் வேட்டை அங்கும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, தமிழ் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அவரை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story