கோடைவிடுமுறை எதிரொலி, வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறை எதிரொலியாக வைகை அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இது, சிறந்த சுற்றுலாதலம் ஆகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை எதிரொலியாக, வைகை அணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைகை அணை மற்றும் பூங்காங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். பூங்காக்களில் உள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்கின்றனர். மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படுகிற ரெயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
இதுமட்டுமின்றி வைகை அணையில் பெடல் படகுகளில் சவாரி செய்து ஆனந்தம் அடைகின்றனர். மேலும் வைகை அணையின் வலது கரையில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் பூங்காவில் அமைக்கப்பட்டு இருக்கும் வண்ண மீன்கள் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசிக்கின்றனர்.
பூங்காவில் உள்ள புல்வெளிகளில் குடும்பம், குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினர். வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், காலை முதல் மாலை வரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கம் போல நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் வைகை அணை வலதுகரை பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இசை நடன நீரூற்று பழுதடைந்த நிலையில் உள்ளது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இசை நடனநீரூற்றை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் வைகை அணை பூங்காவை சீராக பராமரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story