ஆண்டிப்பட்டி அருகே, கணவனை கொன்று நாடகமாடிய பெண் கைது - 2 மாதங்களுக்கு பிறகு துப்புத்துலங்கியது
ஆண்டிப்பட்டி அருகே கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். 2 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் போலீசார் துப்புத்துலக்கினர்.
கண்டமனூர்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி வீரமணி (37). அய்யனார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பிழைப்புத்தேடி வீரமணியின் சொந்த ஊரான கொத்தபட்டியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடியேறினர்.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு அய்யனார் வெளியே சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே கொத்தபட்டி கிராமத்துக்கு தெற்கே அங்குராசு என்பவரின் தோட்டத்தில் தலை மற்றும் கைகளில் ரத்தக்காயங்களுடன் அய்யனார் பிணமாக கிடந்தார்.
இதனைக்கண்ட வீரமணி, ஒரு ஆட்டோவில் உடலை ஏற்றி கொத்தபட்டி சுடுகாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் இறுதிச்சடங்கு செய்வதற்காக பொருட்களை வாங்க ஊருக்குள் சென்றார். இந்தநிலையில் சுடுகாட்டில் அய்யனார் பிணம் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள், ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அய்யனார் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்களும், ஒரு அமைப்பினரும் போலீசில் புகார் செய்தனர். மேலும் மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து அய்யனாரின் சாவு குறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். வீரமணி தலைமறைவானதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே தலைமறைவாக இருந்த வீரமணியை தனிப்படை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அய்யனாரை கொலை செய்ததை வீரமணி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story