குன்றத்தூரில் பயங்கரம் குடிபோதையில் தகராறு செய்த மகனை கொன்ற தந்தை


குன்றத்தூரில் பயங்கரம் குடிபோதையில் தகராறு செய்த மகனை கொன்ற தந்தை
x
தினத்தந்தி 29 May 2019 4:00 AM IST (Updated: 28 May 2019 11:31 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பூந்தமல்லி,

குன்றத்தூர், திருவள்ளுவர் நகர், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 69). இவரது மகன் நாகராஜ் (28). ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி தீபா. நாகராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி நாகராஜ் வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி தீபாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனை நாகராஜின் தந்தை பாண்டியன் தட்டிக்கேட்டார். இதனால் தந்தை-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் மகன் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நாகராஜ் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த நாகராஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் மருமகளிடம் தகராறு செய்த மகனை தந்தையே குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story