நெல்லை அருகே பயங்கரம் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொடூரக்கொலை வாலிபர் கைது-திடுக்கிடும் தகவல்
நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மாயமான சிறுவன்
நெல்லை அருகே உள்ள குறிச்சிகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தளவாய் (வயது 35), கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சரோஜா. இவர்களுக்கு சந்தனமாரி (15), கொம்பையா (9) என 2 மகன்கள். தாழையூத்து சங்கர்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் சந்தனமாரி 9-ம் வகுப்பும், கொம்பையா 3-ம் வகுப்பும் படித்தனர்.
பள்ளி கோடை விடுமுறை என்பதால் கொம்பையா தினமும் தனது நண்பர்களுடன் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள இடங்களுக்கு விளையாட செல்வது வழக்கம். இதேபோல் கடந்த 26-ந்தேதி காலையில் கொம்பையா விளையாட செல்வதாக தனது தாய் சரோஜாவிடம் கூறிவிட்டு வெளியே சென்றான். பின்னர் இரவு 7 மணி ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கொம்பையாவை பல இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மேலும் பதற்றம் அடைந்த தளவாய், இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து கொம்பையாவை தேடி வந்தார்.
தலையில் கல்லைப்போட்டு...
இந்த நிலையில் நேற்று காலை தாழையூத்து நாரணம்மாள்புரம் நான்கு வழிச்சாலை அருகே அய்யா கோவில் அருகில் உள்ள முட்புதரில் ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தாழையூத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், துணை சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், மாயமான சிறுவன் கொம்பையா தான், தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. அவனது உடல் அருகே பெரிய கல்லும் கிடந்தது. மர்மநபர், சிறுவனை கொன்று உடலை முட்புதரில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொம்பையாவின் உடலை போலீசார் மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனது உடலை பார்த்து தாய்-தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
வாலிபர் சிக்கினார்
இந்த கொடூரக்கொலை தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கொலையாளியை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின்பேரில், தாழையூத்து துணை சூப்பிரண்டு பொன்னரசு நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். சிறுவன் கொலை செய்யப்பட்ட பகுதியில் அதிக நேரம் நடமாடியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, சிறுவன் கொம்பையா சம்பவத்தன்று இறுதியாக யாருடன் சென்றான்? என்ற கோணத்தில் போலீசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அதே ஊரை சேர்ந்த கதிர் அடிக்கும் எந்திர டிரைவர் மாயாண்டி (20) என்பவருடன் கொம்பையா சென்றது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு மாயாண்டியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம்
அப்போது கொம்பையாவை கொலை செய்ததை மாயாண்டி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “சம்பவத்தன்று சிறுவனை முட்புதருக்குள் அழைத்துச் சென்றேன். அங்கு சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் (ஹோமோ செக்ஸ்) ஈடுபட முயற்சி செய்தேன். ஆனால் அதற்கு அவன் உடன்பட மறுத்ததுடன், இந்த தகவலை தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று கூறியதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அவனை அடித்து கீழே தள்ளி, அங்கு கிடந்த கல்லால் தாக்கி கொலை செய்தேன். பின்னர் உடலை அங்கேயே போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் வந்து விட்டேன். மேலும் கொம்பையாவை நண்பர்களுடன் சேர்ந்து நானும் தேடுவது போல் நடித்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்” என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மாயாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதேபோல் வேறு ஏதேனும் செயல்களில் அவர் ஈடுபட்டு உள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story