கும்பகோணம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


கும்பகோணம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கும்பகோணம்,

கும்பகோணம் மேலக்கொட்டையூர் 1-வது வார்டுக்குட்பட்ட தெருக்களில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கும்பகோணம் நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

ஆனாலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேலக்கொட்டையூர் பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களை சாலையில் அடுக்கியவாறு மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இது குறித்து உதவி கலெக்டர், கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஆகியோருடன் செல்போன் மூலம் பொதுமக்களின் குறைகளை எடுத்து கூறினார்.

பின்னர் அவர் பொதுமக்களுக்கு அளித்த உத்தரவாதத்தின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கும்பகோணம்-சுவாமிமலை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

3 கிலோ மீட்டர் தூரம்

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். இங்கு 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இது குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிதண்ணீருக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள மேலக்காவேரி பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். அங்கு இரவு நேரத்தில்தான் தண்ணீர் வருகிறது. எனவே உடனடியாக தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ஜெகதீசன் கூறும்போது, குடிநீர் வினியோகிக்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்து வருகிறோம். இன்று இரவுக்குள் பணிகளை முடித்து உடனடியாக தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். 

Next Story