நாகர்கோவிலில் வாலிபர் கொலை: “பிக்பாக்கெட் பணத்தில் பங்கு கேட்டதால் அடித்து கொன்றேன்” கைதான கூட்டாளி வாக்குமூலம்


நாகர்கோவிலில் வாலிபர் கொலை: “பிக்பாக்கெட் பணத்தில் பங்கு கேட்டதால் அடித்து கொன்றேன்” கைதான கூட்டாளி வாக்குமூலம்
x
தினத்தந்தி 29 May 2019 3:45 AM IST (Updated: 29 May 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

பிக்பாக்கெட் அடித்த பணத்தில் பங்கு கேட்டதால் வாலிபரை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக கைதான கூட்டாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறம் உள்ள நூலக வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வாலிபர் கொலை செய்யப்பட்ட இடத்தில் மது போதையில் சுற்றித் திரிந்த ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நாகர்கோவில் மறவன் குடியிருப்பை சேர்ந்த சிவக்குமார் (வயது 31) என்பது தெரியவந்தது. போதையில் சுற்றித்திரிந்தவர் கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த ஜாண்(34). இவர்கள் இரண்டு பேரும் பிக்பாக்கெட் திருடர்கள். இவர்கள் மீது நாகர்கோவிலில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

பிக்பாக்கெட் அடித்த பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் சிவகுமாரை, கூட்டாளி ஜாண் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து வடசேரி போலீசார் நேற்று ஜாணை கைது செய்தனர்.

வாக்குமூலம்

கைதான ஜாண் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும், சிவகுமாரும் சேர்ந்து நாகர்கோவில் பகுதியில் வழிப்பறி மற்றும் பிக்பாக்கெட் சம்பவத்தில் ஈடுபடுவோம். அதில் கிடைக்கும் பணத்தை இருவரும் பங்கு பிரித்து கொள்வோம். சம்பவத்தன்று நான் பிக்பாக்கெட் செய்ததில் ரூ.3 ஆயிரம் கிடைத்தது. இதனை சிவக்குமாரிடம் கூறினேன்.

தகராறு

அந்த பணத்தில் சிவக்குமார் பங்கு கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு நடந்தது. பின்னர் இருவரும் சேர்ந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம். அங்கும் சிவகுமார் என்னிடம் தகராறு செய்தார். இதனால் எனக்கு கோபம் ஏற்பட்டது. படம் முடிந்த பின்பு இருவரும் மதுகுடித்து கொண்டிருந்தபோது பணத்தில் பங்கு கேட்டு சிவக்குமார் மீண்டும் தகராறு செய்து என்னை அடித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சிவக்குமாரை பலமாக தாக்கினேன். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு சிவகுமார் மயங்கி விழுந்து இறந்தார். நானும் அதிக மது போதையில் இருந்ததால் அங்கேயே படுத்து தூங்கி விட்டேன். பின்னர் போலீசில் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story