பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்


பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த அதிகாரப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரியம்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளி வளாகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலை சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் அந்த சிலையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றினர். பீடம் மட்டும் இருந்தது.

இந்தநிலையில் புதிதாக சிலை அமைத்து அங்கு வைக்க அந்த கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி 8 அடி உயரமுள்ள புதிய சிலை அமைத்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பள்ளி வளாகத்தில் கொண்டு வைத்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் அன்று இரவு போலீசாரும், வருவாய்த்துறையினரும் கிராமத்திற்கு வந்து சிலையை பார்வையிட்டனர். பின்னர் அனுமதியில்லாமல் புதிய சிலையை பள்ளி வளாகத்தில் வைக்கக்கூடாது, எனவே சிலையை அகற்றுங்கள், என ஊர் பொதுமக்களிடம், தெரிவித்தனர். அந்த சிலை சுற்றி துணியால் மறைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பொதுமக்கள், சிலை அந்த இடத்திலேயே இருக்க வேண்டும், என வலியுறுத்தினர். இதுதொடர்பாக பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று காலையிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அரூர் உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன், தாசில்தார் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், சிலையை பள்ளி வளாகத்தில் இருந்து எடுத்து ஊருக்கு மத்தியில் வைக்க வேண்டும், என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிலையை அங்கிருந்து கிரேன் மூலம் அகற்றினர். இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story