திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 19 பேர் கைது - போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். திருப்பூர் வந்தால் வேலையில்லை என்ற வார்த்தைக்கு இடமில்லை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமல்லாது வடமாநில தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்து வருகிறார்கள். அனைவரையும் திருப்பூர் அரவணைத்துக்கொள்கிறது.
இந்த நிலையில் தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக வங்காள தேசத்தை சேர்ந்தவர்களும் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்து வேலை பார்த்து வருவதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருப்பூரில் உள்ள பல்வேறு பனியன் நிறுவனங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பெயர்பட்டியலை வாங்கி சரிபார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சிறுபூலுவபட்டி அத்திக்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்காளதேசத்தினர் தங்கி இருந்து வேலை பார்ப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அத்திக்காடு தோட்டம் பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள தொழிலாளர்கள் சிலர் பேசும் மொழியில் வேறுபாடு தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டைகளை ஆய்வு செய்தனர். அப்போது அவை அனைத்தும் போலி ஆவணங்கள் என்று தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஆவணங்கள் இல்லாமல் கடந்த 4 மாதங்களாக தங்கி இருந்து வேலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வங்காள தேசத்தை சேர்ந்த அலாம்கிர் (வயது 27), சுமன் (21), மஞ்சுருல் ஹக் (24), அப்துல் கலாம் (31), கோகான் (30), டோலான் ஹூசைன் (21), ஜோஜிப்மியா (27), முக்தர் மியா (35), ஆஷிக் (25), லல்மியா (25), கபீர் ஹூசைன் (30), நூருல் (23), ஷமின் (21), ஹபிபர் (25), குகான் (25), ரபீக்யுலிசிலேம் (50), ஜகான்கிர்லம் (40), பிஜாஸ் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் அனை வரும் திருப்பூர் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கைதானவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருப்பூரில் உரிய ஆவணங்கள்இன்றி தங்கி இருந்த நைஜீரியர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிட தக்கது. இந்த நிலையில் தற்போது வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாததோடு மட்டுமல்லாமல் போலி ஆதார் அட்டைகள் வைத்துக்கொண்டு திருப்பூரில் வேலை செய்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story