சூறாவளி காற்றுடன் பலத்த மழை, மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் பலி - பேரணாம்பட்டில் பரிதாபம்
பேரணாம்பட்டு பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது புளியமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
பேரணாம்பட்டு,
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சூறாவளி காற்றின் காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சூறாவளி காற்றுக்கு கடையின் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தன. தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையின் காரணமாக தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பேரணாம்பட்டு அருகே உள்ள செர்லபல்லி பகுதியில் புளியமரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்து உடைந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலபல்லி கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19). ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (21). பெங்களூருவில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். விஷ்ணுவும், சந்திரசேகரும் நண்பர்கள். 2 பேரும் தங்களது சொந்த ஊரில் நடந்த கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்துள்ளனர்.
நேற்று மாலை வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை பேரணாம்பட்டுக்கு சென்று வாங்கி கொண்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்ற னர். அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த புளியமரத்தின் கிளை முறிந்து விஷ்ணு, சந்திரசேகர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்த வாலிபர்கள் மரக்கிளை முறிந்து விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் பகுதியில் காலையில் கடுமையான வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடாம்பூர் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் முபாரக்அலி என்பவரின் வீட்டின் அருகே இருந்த புளியமரம் சாய்ந்து குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதே போல வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல இடங் களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
Related Tags :
Next Story