திருவண்ணாமலை அருகே, 10 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணை - கலெக்டர் வழங்கினார்


திருவண்ணாமலை அருகே, 10 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணை - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 28 May 2019 10:45 PM GMT (Updated: 28 May 2019 9:05 PM GMT)

திருவண்ணாமலை அருகே 10 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணையை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமம் அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவர் கலெக்டர் கந்தசாமியை நேரில் சந்தித்து தங்கள் பகுதியில் 10 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வசதி செய்து தருமாறு கோரிக்கை மனு அளித்தார்.

இதுகுறித்து கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், 10 குடும்பங்களும் 25 வருடங்களுக்கு முன்பு கீழ்நாத்தூர் பகுதியில் இருந்து கட்டுமானப் பணிகள் செய்வதற்காக சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமம் அண்ணாமலைபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக குடியேறி வசித்து வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 10 குடும்பத்தினரும் அங்கிருந்து திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் உட்புறமாக அண்ணாமலைபுரத்தில் தற்காலிக வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். இந்த 10 குடும்பத்தில் 2 பேர் கல்லூரிக்கும், 5 குழந்தைகள் பள்ளிக்கும் செல்கிறார்கள். மேலும் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் 7 பேர் உள்பட மொத்தம் 42 பேர் தற்காலிக குடிசை வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தினக்கூலி வேலை செய்து தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வருகின்றனர். இதுநாள் வரை மின்சார வசதி இல்லாமல் குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் உள்பட அனைவரும் வசித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையிடம் உடனடி மின்இணைப்பு வசதி கிடைப்பதற்கு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அண்ணாமலைபுரம் பகுதிக்கு நேரில் சென்று அங்கு வசித்து வரும் 10 குடும்பங்களின் வீடுகள், அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினார்.

இது குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், “பல வருடங்களாக அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வரும் 10 குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று அவர்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அடுத்து 10 நாட்களுக்குள் அவர்களுக்கு மின்சார வசதி செய்து தரப்படும். மேலும் இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருவதால் முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், கழிவறை வசதியுடன் கட்டித் தருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாலை வசதி, தெரு விளக்கு வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, இந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் ஊரக வளர்ச்சி துறை மூலமாக குழாய் இணைப்பு வசதி செய்து தரப்படும்” என்றார்.

Next Story