மகளின் சாவுக்கு பழி தீர்த்த தொழிலாளி, மாற்றுத்திறனாளியை கர்ப்பமாக்கிய விவசாயி குத்திக்கொலை
சின்னமனூர் அருகே மகளின் சாவுக்கு பழிதீர்க்கும் வகையில், மாற்றுத்திறனாளியை கர்ப்பமாக்கிய விவசாயி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி நடுதெருவை சேர்ந்தவர் ரத்தினவேல்பாண்டி (வயது 41). விவசாயி. இவருக்கு திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
அதேஊரில் கல்யாண மண்டபதெருவில் வசித்து வருபவர் கோச்சடை என்ற குருசாமி (60). கூலித்தொழிலாளி. அவருடைய மகள் அம்சவள்ளி. இவர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.
இந்தநிலையில் ரத்தினவேல்பாண்டி, அம்சவள்ளியுடன் நெருங்கி பழகினார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அம்சவள்ளி கர்ப்பமாகி விட்டார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ரத்தினவேல்பாண்டியை வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த அம்சவள்ளி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகள் சாவுக்கு காரணமான ரத்தினவேல்பாண்டி மீது குருசாமி ஆத்திரத்தில் இருந்தார். மேலும் அவரை கொலை செய்து பழி தீர்க்க திட்டமிட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை, சீலையம்பட்டியில் இருந்து வேப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் ரத்தினவேல்பாண்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த குருசாமி, அவருடைய மகன் வீமராஜா ஆகியோர் ரத்தினவேல் பாண்டியை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினவேல்பாண்டி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து தந்தையும், மகனும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரத்தினவேல்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளை கர்ப்பமாக்கி விட்டு ரத்தினவேல்பாண்டி திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் விரக்தி அடைந்த என்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டார். எனது மகள் சாவுக்கு காரணமாக ரத்தினவேல்பாண்டியை நானும், எனது மகனும் சேர்ந்து கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய வீமராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story