ஓ.பன்னீர்செல்வம் மகனை ‘மத்திய அமைச்சர்’ என சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு


ஓ.பன்னீர்செல்வம் மகனை ‘மத்திய அமைச்சர்’ என சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 May 2019 4:15 AM IST (Updated: 29 May 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் ப.ரவீந்திரநாத்குமாரை ‘மத்திய அமைச்சர்‘ என்று குறிப்பிட்டு தேனியில் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ந்தேதி சின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள ஒரு தனியார் கோவிலில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று கல்வெட்டு வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. கல்வெட்டு வைக்கப்பட்ட சம்பவம் குறித்து அ.தி.மு.க. தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வெட்டு வைத்ததாக கோவில் நிர்வாகியான வேல்முருகன் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வேல்முருகன் போலீஸ் ஏட்டாக பணியாற்றி கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டு சர்ச்சை ஏற்பட்ட தேனி மாவட்டத்தில் தற்போது ப.ரவீந்திரநாத்குமாரை ‘மத்திய அமைச்சர்‘ என்று குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனியை சேர்ந்த அ.தி.மு.க. வார்டு செயலாளர் ஒருவர், தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ப.ரவிந்திரநாத்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நகரில் பல இடங்களில் சுவரொட்டி ஒட்டி உள்ளார். அதில் ப.ரவீந்திரநாத்குமார் பெயரோடு ‘எங்கள் மத்திய அமைச்சரே‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் சமூக வலைதளங்களிலும் அ.தி.மு.க.வினர் ப.ரவீந்திரநாத்குமாரை ‘மத்திய அமைச்சர்‘ என்கிற அடைமொழியோடு பல்வேறு பதிவுகள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ எந்த அறிவிப்பும் வெளியாகாத சூழ்நிலையில் ‘மத்திய அமைச்சர்‘ என்ற அடைமொழி கொடுக்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

Next Story