தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி: பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை ‘திடீர்’ ராஜினாமா
தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
பெங்களூரு,
தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அவர் ‘கர்நாடக சிங்கம்’ என்ற புனைப்பெயர் பெற்றவர் ஆவார்.
அண்ணாமலை ராஜினாமா
பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்தவர் அண்ணாமலை. ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டார். இரவு நேரங்களில் ரவுடிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுத்தார்.
மேலும் பணிச்சுமையால் அவதிப்பட்ட போலீசாருக்கு கண்டிப்பாக வாரவிடுமுறை அளிக்கும் நடைமுறையை அமல்படுத்தினார். இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அவர் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதன் தொடர்ச்சியாக நேற்று ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவிடம் வழங்கினார்.
தமிழகத்தை சேர்ந்தவர்
ராஜினாமா செய்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, தமிழ்நாடு கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை பெயர் குப்புசாமி. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வானதை தொடர்ந்து உடுப்பி மாவட்டம் கார்கலாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கிய அவர் உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்தார்.
சிக்கமகளூருவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பின்னர் அவர் பெங்களூரு துணை போலீஸ் கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். உடுப்பி, சிக்கமகளூருவில் பணி செய்தபோது அவர் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து வந்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப்பெற்றார்.
அரசியல் அழுத்தம் இல்லை
இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்த அண்ணாமலை தனது ராஜினாமா பற்றி அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியது பெருமையாக உள்ளது. எனது ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யும்படி முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். எனது முடிவை நான் மாற்றவில்லை. என்னை பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்து பணி வழங்கியது குமாரசாமி தான். அவர் கொடுத்த பணியை 8 மாதங்களாக செய்தேன். அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. குமாரசாமி எளிமையாக நடந்து கொள்ளும் முதல்-மந்திரி. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல், முன்னாள் போலீஸ் மந்திரிகளான பரமேஸ்வர், கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் எனக்கு நல்ல ஆதரவு அளித்தனர். அரசியல் அழுத்தம் காரணமாக நான் ராஜினாமா செய்யவில்லை. 9 ஆண்டுகளாக ஐ.பி.எஸ். பணி செய்த நிலையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்தது என்ன?
மேலும், தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனது பணியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த முடிவை கடந்த 6 மாதங்களாக யோசித்து எடுத்துள்ளேன். காக்கிச்சட்டை(போலீஸ் உடை) அணிந்து செயல்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் மறக்க முடியாது. போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்பதை நம்புகிறேன். அத்துடன் உயர் அழுத்த பணியாகவும் இருக்கிறது. இதனால் ஏராளமான விழாக்களில் நான் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு கைலாஷ் மானசரோவார் யாத்திரைக்கு சென்றபோது வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி அறிந்தேன். ஐ.பி.எஸ். அதிகாரி மதுக்கர் செட்டியின் இறப்பும் என் வாழ்க்கையை சுயபரிசோதனை செய்ய தூண்டியது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்து அதை செய்துள்ளேன். என் செயல்பாடு யாரையும் பாதித்து இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.
அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறீர்கள் என கேள்விகள் எழுகின்றன. நான் சிறிது காலம் ஓய்வில் இருக்க விரும்புகிறேன். எனது மகனுக்கு நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன். அவனுடன் நேரத்தை செலவிட உள்ளேன். அதன்பிறகு அடுத்து செய்யும் செயல்பற்றி முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story