கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு குழந்தை இறந்து பிறந்தது


கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு குழந்தை இறந்து பிறந்தது
x
தினத்தந்தி 29 May 2019 3:30 AM IST (Updated: 29 May 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு குழந்தை இறந்து பிறந்தது.

கோலார் தங்கவயல், 

கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு குழந்தை இறந்து பிறந்தது. அவர் பிரசவ வலியால் வரண்டாவில் துடி, துடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

நிறைமாத கர்ப்பிணி

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை 4-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். இவருடைய மனைவி சமீனா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ரியாஸ், தனது மனைவியை கோலார் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்கேன் எடுத்துவர கூறியுள்ளனர்.

இதனால், ரியாஸ் தனது மனைவி சமீனாவுடன் ஸ்கேன் எடுப்பதற்காக சென்றார். பின்னர் ஸ்கேன் எடுத்துவிட்டு அவா்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால், ஆஸ்பத்திரியில் யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் சமீனாவை ரியாஸ் வரண்டாவில் அமர வைத்துவிட்டு டாக்டரை பார்க்க சென்றார்.

குழந்தை இறந்து பிறந்தது

ஆனால் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இருந்தும் சமீனாவுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால், சமீனா வரண்டாவில் பிரசவ வலியால் துடி, துடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சுமார் 2 மணி நேரம் கழித்து அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சிவக்குமார் அங்கு வந்தார். அப்போது, அவர் சமீனாவை கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் சமீனா, மேல் சிகிச்சைக்காக கோலார் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது, சமீனாவுக்கு குழந்தை இறந்து பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரியாஸ், கதறி அழுதார். அப்போது அவர், கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்து பிறந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் வீரேஷ், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து, அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதார துறை மந்திரி சிவானந்த பட்டீல் உத்தரவிட்டதாக கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சிவக்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா சசிதர், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தலைமை டாக்டர் சிவக்குமாரிடம் விவரங்களை கேட்டறிந்து கொண்டார். மேலும் அவர் ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அலட்சியமாக இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது என்றும், இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தலைமை டாக்டருக்கு உத்தரவிட்டார்.

கடும் நடவடிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சிவக்குமார் கூறுகையில், கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரிக்கு சமீனா என்ற பெண் பிரசவத்துக்காக வந்தார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சமீனாவுக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை ஸ்கேன் எடுத்து வர டாக்டர்கள் கூறினார்கள்.

அதில், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நான் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறேன். டாக்டர்கள் அலட்சியமாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் இங்கு நடக்காமல் பார்த்து கொள்வோம் என்றார்.

சமூக வலைத்தளங்களில் வைரல்

இந்த நிலையில், கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரி வரண்டாவில் சமீனா பிரசவ வலியால் துடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல்வேறு தரப்பினர் கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

Next Story