மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை சட்டமன்ற தேர்தலை இணைந்து எதிர்கொள்ள முடிவு
மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜனதா 23 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களிலும் அபார வெற்றி கண்டது.
மும்பை,
மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜனதா 23 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களிலும் அபார வெற்றி கண்டது.
கூட்டணி பிரச்சினை
மாறாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தன. தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியால் ஒரேஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கனியை பறிக்க முடிந்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சிறிய கட்சிகளை இணைந்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் முயற்சி மேற்கொண்டன.
ஆனால் அந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவுகளில், எதிர்க்கட்சி கூட்டணி பலமாக அமையாததின் தாக்கத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பாக பாரிபா பகுஜன் மகாசங் கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி இணைந்து உருவாக்கிய வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி 48 தொகுதிகளிலும் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றதுடன் ஒரு எம்.பி. பதவியையும் கைப்பற்றியது.
எதிர்க்கட்சி கூட்டம்
இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தின. மும்பையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார், தனஞ்செய் முண்டே, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பிரகாஷ் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் அசோக் தவாலே மற்றும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அபு ஆஸ்மி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின்பு மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-
இணைந்து செயல்பட முடிவு
இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் இந்த வருட இறுதியில் வரவிருக்கும் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
பிரகாஷ் அம்பேத்கர், ஒவைசி தலைமையிலான கூட்டணியால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமையவில்லை. சட்டமன்ற தேர்தலில் அவர்கள் கூட்டணியில் இணையும் பட்சத்தில் நிலைமை சற்று மாற்றம் ஏற்படும். இதுகுறித்து அந்த கட்சிகளை அணுகி பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
முக்கிய பிரச்சினை என்னவென்றால் அவர்களுக்கு கூட்டணியில் இணைய விருப்பம் இருக்கிறதா என்பது தான். நாங்கள் கடந்த முறை முயற்சி செய்தபோது அதற்கு பலன் கிடைக்கவில்லை.
ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியை கூட்டணியில் இணைந்துகொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சரத்பவார் ஆலோசனை
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து தேசியவாத காங்கிரஸ் தனித்து ஆலோசனை நடத்த உள்ளது. சரத்பவார் தலைமையில் வருகிற 1-ந் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story