கள அனுபவம் பெற ஜல்லிக்கட்டை பார்வையிட புதுவை குழு திருச்சி செல்கிறது


கள அனுபவம் பெற ஜல்லிக்கட்டை பார்வையிட புதுவை குழு திருச்சி செல்கிறது
x
தினத்தந்தி 29 May 2019 3:30 AM IST (Updated: 29 May 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ஜல்லிக்கட்டை நடத்த கள அனுபவம் பெறுவதற்காக புதுவை குழு திருச்சி செல்கிறது. புதுவை கலெக்டர் அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, 

புதுச்சேரி அரசானது தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு இந்த வருடம் ஜனவரி மாதம் நடத்தை விதிகளை வெளியிட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு கமிட்டியின் தலைவர் ஆவார்.

அதன் தொடர்ச்சியாக விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அனைத்து துறை பிரதிநிதிகள் கொண்ட தொழில்நுட்ப குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை என்ற அமைப்பு ஜல்லிக்கட்டை புதுவையிலும் நடத்தும்பொருட்டு விண்ணப்பம் அளித்துள்ளது.

அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்பொருட்டு தொழில்நுட்பக்குழு ஜல்லிக்கட்டை புதுவையில் நடத்துவதற்கான இடங்கள் மற்றும் இதர கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள டி.மங்களம்பட்டி புதூர் என்ற இடத்தில் ஜல்லிக்கட்டு இன்று (புதன்கிழமை) நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் இவ்விளையாட்டு முதன்முதலில் நடைபெற சாத்தியக்கூறுகள் இருப்பதால் தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடைமுறை கள அனுபவம் பெறுவதன் பொருட்டு கலெக்டர், கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த விளையாட்டை நேரில் சென்று பார்த்து ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்படி இன்று தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள் அங்கு செல்கின்றனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

Next Story