புதுவை மாநிலத்தில், கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - போலீஸ் அதிகாரிகளுக்கு, நாராயணசாமி உத்தரவு


புதுவை மாநிலத்தில், கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - போலீஸ் அதிகாரிகளுக்கு, நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 29 May 2019 4:45 AM IST (Updated: 29 May 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, 

ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனை தொடர்ந்து இந்தியாவிலும் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக கேரள மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை சட்டசபை வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது “தீவிரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து புதுவை கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், கடலோர காவல்படையினருடன், புதுவை கடலோர போலீசாரும் இணைந்து தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். புதுவை பகுதியில் தற்போது போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வார இறுதி நாட்களில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிமாநில வாகனங்கள் அதிகம் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Next Story