கவர்னர் கிரண்பெடி மாற்றமா? நன்றி தெரிவித்து புதுவை மக்களுக்கு திடீர் கடிதம்


கவர்னர் கிரண்பெடி மாற்றமா? நன்றி தெரிவித்து புதுவை மக்களுக்கு திடீர் கடிதம்
x
தினத்தந்தி 29 May 2019 5:00 AM IST (Updated: 29 May 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநில கவர்னராக உள்ள கிரண்பெடி மாற்றப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் திடீரென கடிதம் எழுதி உள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில கவர்னராக கடந்த 29.5.16 அன்று கிரண்பெடி பொறுப்பேற்றார். அதன்பிறகு ஒரு வாரத்தில் முதல்-அமைச்சராக நாராயணசாமி பதவியேற்றார். இந்தநிலையில் ஆட்சியாளர்களுக்கும் கிரண்பெடிக்கும் மோதல் போக்கே நீடித்து வந்தது. ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்ததுடன் அரசு சார்பில் அனுப்பிய கோப்புகளை பல்வேறு விளக்கம் கேட்டு கிரண்பெடி திருப்பி அனுப்பினார். இதற்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் என்று தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். ஆனால் அதை கவர்னர் கிரண்பெடி மறுத்து வந்தார்.

இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாநில அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனை ஏற்று அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னருக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மீண்டும் பிரதமராக மோடி நாளை (வியாழக்கிழமை) பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு வந்ததன் பேரில் கிரண்பெடி நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக அவர் புதுவையில் இருந்து கார் மூலம் சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

டெல்லி செல்வதற்கு முன்பாக புதுவை மக்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் கிரண்பெடி கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநில கவர்னராக பொறுப்பேற்று இன்றுடன்(புதன்கிழமை) எனது 3 ஆண்டு காலத்தை நிறைவு செய்கிறேன். காலங்கள் கடந்தாலும் எனது பணியின் நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை மாநில முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளன. இதற்காக நான் தொழில்நுட்பத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் கவர்னர் மாளிகையின் மீது தேசிய கொடி ஏற்றப்படும் போது எழுப்பப்படும் ஊதுகுழலின் ஒலியுடன் எனது பணியை தொடங்குகிறேன். இது என்னுடைய வாழ்வின் குறிக்கோளையும், எனது உள்ளுணர்வையும் தட்டி எழுப்பி அதை எனக்கு உணர செய்கிறது. எனது உள்ளுணர்வு திட்டமிடுவதற்கும், பெரும்பாலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் வழிவகை செய்கிறது.

என் மீது நம்பிக்கை வைத்து, என்னை புதுவை மாநில கவர்னராக நியமித்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரியின் நலனுக்காக கவர்னர் மாளிகை பெரும் பங்காற்றியுள்ளது. இதற்காக பாடுபட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுவையின் மாற்றத்திற்காக ஒத்துழைத்த தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பெரும்பாலான சவால்களை தமது அனுபவத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் எனது சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ் தலைமையில் செயல்பட்டு வரும் கவர்னர் மாளிகை குழுவின் அனைத்து உணர்வுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரியின் அனைத்து தரப்பு மக்களும், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்த மக்களும் என் மீது வைத்த நம்பிக்கைக்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரிக்கு என தனிச்சிறப்புகள் பல உண்டு. இங்கு சமுதாய ஒற்றுமையும், அமைதியும் உள்ளது. புதுவையில் தலைக்கவசம் அணியாமல் இருப்பது மற்றும் ஒரு சில குற்றசெயல்கள் தவிர மற்றபடி மக்கள் அனைவரும் பொதுவாக சட்டத்தை மதிப்பவர்கள் தான்.

வளர்ச்சிக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் புதுச்சேரி தன்னகத்தே கொண்டுள்ளது. நல்ல அரசியல் தலைமை, பொதுமக்கள், பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பொறுப்புடன் செவ்வனே தங்கள் பணியை செய்து வந்தால் இந்த மாநிலம் மேலும் முன்னேற்றம் அடையும். சாதி, மத, பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் நாடு வளம்பெறும். முடிந்த அளவு, நான் புதுச்சேரியின் தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பொதுவாக புதுவை மாநில கவர்னரின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் கவர்னர் கிரண்பெடி பதவியேற்ற போது 2 ஆண்டுகளில் புதுவையை விட்டு சென்று விடுவேன் என்று கூறி இருந்தார். இன்றுடன் (புதன் கிழமை) அவர் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தற்போது புதுவை மாநில வளர்ச்சிக்காக தான் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து திடீரென பொதுமக்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

எனவே கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருந்து மாற்றப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி சென்றுள்ள அவர் இதுகுறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தலாம் என்று தெரிகிறது.

Next Story