வானவில் : மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ‘டாடா டியாகோ’


வானவில்  : மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ‘டாடா டியாகோ’
x
தினத்தந்தி 29 May 2019 12:23 PM IST (Updated: 29 May 2019 12:23 PM IST)
t-max-icont-min-icon

டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் ‘டியாகோ’ மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடலாகும். இந்த மாடலில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. ஆகிய வசதிகள் சமீபத்தில்தான் சேர்க்கப்பட்டன.

தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்து ஜூலை மாதம் சந்தைக்கு விடுகிறது டாடா மோட்டார்ஸ். புதிய மாடலில் டிரைவர் இருக்கைக்கு ஏர் பேக் வசதி தற்போது புகுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ரியர் பார்க்கிங் சென்சார் வசதி, ஸ்பீட் அலெர்ட் எச்சரிக்கை, சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியன இனிவரும் மாடல்களில் கட்டாயம் இடம்பெறும். இதேபோன்ற பாதுகாப்பு அம்சங்களை தனது டிகோர் காம்பாக்ட் செடானிலும் சேர்க்க திட்டமிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.

டாடா டியாகோ மாடல் விலை ரூ.4.40 லட்சத்தில் தொடங்குகிறது. புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டதால் இதன் விலை ரூ.15 ஆயிரம் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 85 ஹெச்.பி. திறன், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாகும். 70 ஹெச்.பி. திறனுடன் 1.05 லிட்டர் டீசல் என்ஜின் மாடலும் கிடைக்கிறது. அடுத்த ஆண்டு பாரத் 6 புகை விதி கட்டுப்பாடுகள் வர உள்ளதால் அனேகமாக டீசல் கார் உற்பத்தியை இந்நிறுவனம் நிறுத்தக் கூடும் என்று தெரிகிறது. பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல் கார்களுமே 5 கியர்களைக் கொண்டவை. ஆட்டோமேடிக் மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதி பெட்ரோல் என்ஜின் மாடலில் மட்டும் கிடைக்கிறது. புதிய மாற்றங்களை உடனுக்குடன் தனது கார்களில் புகுத்தும் டாடா மோட்டார்ஸின் படைப்புகளுக்கு பெரும் வரவேற்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Next Story