வானவில் : வந்துவிட்டது ஹூண்டாய் ‘வென்யூ’
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல் காரான ‘வென்யூ’ தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.யு.வி. பிரிவில் ஹூண்டாயின் புதிய காரான வென்யூ குறித்த எதிர்பார்ப்பு ஏறக்குறைய 6 மாதங் களுக்கு மேலாக நீடித்து வந்தது. எஸ்.யு.வி. பிரிவில் கிரெடாவைத் தொடர்ந்து தற்போது வென்யூ மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.6.50 லட்சம் முதல் ரூ.11.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் 1.2 வேரியன்ட் ரூ.6.50 லட்சமாகவும், அதிகபட்சம் ரூ.7.20 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசலில் 1.4 வேரியன்ட் ரூ.7.75 லட்சம் முதல் ரூ.10.84 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கப்பா 1.0 டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்ட ரகத்தையும் இந்நிறுவனம் வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ப தயாரித்து அளிக்கிறது. இதன் விலை ரூ.8.21 லட்சம் முதல் ரூ.11.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டர்போ சார்ஜ்டு வாகனம் சோதனை ஓட்டத்தில் லிட்டருக்கு 18.27 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. இதேபோல 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வாகனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.15 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. டீசல் கார் (1.4 லிட்டர் வேரியன்ட்) 23.70 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்புதிய மாடல் போர்டு எகோ ஸ்போர்ட், சுஸுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300, டாடா நெக்ஸான் ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
புளூலிங்க் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்ட முதலாவது சர்வதேச வாகனம் என்ற பெருமையும் வென்யூ காருக்கு உண்டு. இதில் பல்வேறு அம்சங்கள் முதல் முறையாக புகுத்தப்பட்டுள்ளன. இன்டர்நெட் இணைப்பு வசதி, முன்பகுதியில் இரண்டு ஏர் பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., சீட் பெல்ட் எச்சரிக்கை, பின்புற பார்க்கிங் சென்சார் ஆகியன இதில் புகுத்தப்பட்டுள்ளன. இதில் பிரீமியம் மாடல் காரில் 6 ஏர் பேக் உள்ளன. அத்துடன் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல், பின்புற கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிறுவனம் முதல் முறையாக 3 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக (கிலோ மீட்டர் கணக்கல்ல) தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சாலை வழி உதவியை நிறுவனம் (ரோட் அசிஸ்ட்) அளிக்கும். அத்துடன் வீட்டுக்கு வந்து கார் சர்வீஸ் செய்து தரும் வசதியையும் நிறுவனம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் மொத்தம் 6 வேரியன்ட்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் ஹூண்டாய் நிறுவனம் வென்யூ மாடல் அறிமுகத்தின் மூலம் தொடர்ந்து சந்தையில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்பது நிரூபணமாகியுள்ளது. முதல் நாளன்றே 2 ஆயிரம் பேர் இந்தக் காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story