சத்துவாச்சாரியில் சுவரை இடிக்காமல் ஜாக்கி வைத்து 4 அடி உயர்த்தப்பட்ட மாடிவீடு
சத்துவாச்சாரியில் தெருவைவிட பள்ளமான வீட்டை 200 ஜாக்கிகள் வைத்து தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயரம் தூக்கி உள்ளனர்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கஜேந்திரமன்னன், வியாபாரி. இவர் அதே பகுதியில் மாடியுடன்கூடிய வீடு கட்டி வசித்து வருகிறார். அவ்வப்போது அந்த பகுதியில் ரோடு உயர்த்தப்பட்டு வந்ததால் இவருடைய வீடு ரோட்டைவிட்டு பள்ளமாகிவிட்டது. இதனால் வீட்டில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியவில்லை. கழிவுநீர் கால்வாயில் வரும் தண்ணீர் வீட்டுக்குள் வரும்நிலை உருவானது.
மேலும் தற்போது இந்தப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் வீடு இன்னும் பள்ளமாகும் நிலை ஏற்படும். எனவே வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடுகட்ட நினைத்தார். ஆனால் 800 சதுர அடியில் மாடி வீடு கட்டியிருப்பதால் அதை இடித்துவிட்டு புதிய வீடுகட்ட அதிக செலவாகும். வீட்டை இடிப்பதால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும்.
எனவே வீட்டை இடிக்காமல் வீட்டின் தரைமட்டத்தை உயர்த்த திட்டமிட்டார். இதற்காக சென்னையில் செயல்பட்டு வரும், வீட்டை இடிக்காமலேயே ஜாக்கி மூலம் வீட்டை உயர்த்தும் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தணிகைமலை என்பவர், கஜேந்திரமன்னனின் வீட்டை இடிக்காமலேயே உயர்த்த முன்வந்தார்.
இதற்காக ஒரு சதுர அடிக்கு இவ்வளவு தொகை என்பதன் அடிப்படையில் அதற்கான பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தை உயர்த்த 200 ஜாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. வீட்டு சுவர்களில் ஒரு சிறிய வெடிப்புக்கூட விழாமல் ஜாக்கிகளை வைத்து வீட்டை உயர்த்தி வருகிறார்கள்.
சிறிய அசைவுகூட இன்றி தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயரத்துக்கு வீட்டை உயர்த்தி உள்ளனர். இதனால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை என்றும், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும், குறைந்த செலவிலேயே வீட்டின் தரைமட்டம் உயர்த்தப்படுவதாக கஜேந்திரமன்னன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story