திருப்பத்தூர் அருகே மினி லாரி கவிழ்ந்து சிறுவன் பலி
திருப்பத்தூர் அருகே மினி லாரி கவிழ்ந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஊர் கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூரில் உள்ள அவர்களது குல தெய்வமான பொண்ணாத்தம்மன் கோவிலுக்கு ஆண்டு தோறும் வந்து கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அதற்காக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் மினி லாரியில் வந்திருந்தனர். கிடா வெட்டி சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு மினி லாரியில் புறப்பட்டனர். திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் நள்ளிரவில் மினி லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிவக்குமார் என்பவரது மகன் செல்லத்துரை (வயது 8) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் மினி லாரியில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் கோவிந்தசாமி மகன் அண்ணாமலை, சேட்டு, உண்ணாமலை, காசியம்மாள், ஜெயா உள்பட 12 பேர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story