எட்டயபுரம் அருகே பலத்த சூறைக்காற்று: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 11 ஆடுகள் சாவு


எட்டயபுரம் அருகே பலத்த சூறைக்காற்று: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 11 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 30 May 2019 4:45 AM IST (Updated: 29 May 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே பலத்த சூறைக்காற்று வீசியதில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 11 ஆடுகள் பரிதாபமாக செத்தன. சூறைக்காற்றுக்கு 2 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குளத்துவாய்ப்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் அய்யலுசாமி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல தனக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றார். இந்தநிலையில் மாலையில் வானம் மேக மூட்டமாக மாறியதை தொடர்ந்து மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை, வீட்டுக்கு கூட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது பயங்கர சூறைக்காற்று வீசியது. இதில் அங்குள்ள தோட்டத்தின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து கீழே கிடந்தது. இதை அறியாத நிலையில் அவர் ஆடுகளை கூட்டி வந்தபோது, மின்கம்பியை மிதித்ததில் 11 ஆடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக செத்தன.

கந்தக பூமியான கோவில்பட்டியில் நேற்று காலை வழக்கம் போல வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை 3 மணி அளவில் திடீரென வெயில் குறைந்து வானம் மேக மூட்டமாக மாறி மழை தூறியது. அப்போது மேற்கு பகுதியில் இருந்து பயங்கர சூறைக்காற்று வீசியதால் மழை கிழக்கு பகுதியை நோக்கி சென்றுவிட்டது.

சூறைக்காற்று வீசியதில் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி சூசையம்மாள் (வயது 50), முத்துக்கனி மனைவி அந்தோணியம்மாள் (50) ஆகியோரது வீடுகளின் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பறந்தன. அந்த 2 வீடுகளும் பலத்த சேதமடைந்தன.

தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி ஆகியோர் வந்து பார்வையிட்டனர். மேலும் எட்டயபுரம் பகுதியில் இடி- மின்னல் மற்றும் பயங்கர சூறைக்காற்றுடன் பெய்த மழையில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில வீடுகளும் லேசான சேதம் அடைந்தது.

Next Story