கடலோர காவல்படை, கடற்படையில் சேர விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கடலோர காவல்படை, கடற்படையில் சேர விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 29 May 2019 11:00 PM GMT (Updated: 29 May 2019 5:50 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர காவல்படை, கடற்படையில் சேர விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி, 

இது குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுகளில் மீனவ இளைஞர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவதற்கு வசதியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியில் சேர தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மற்றும் அதற்கு மேல் படித்த மீனவர்கள், மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம். இது 3 மாத பயிற்சி ஆகும். பயிற்சியின் போது பயிற்சி பெறும் மீனவ இளைஞர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் மாதம் ரூ.1000-வீதம் மூன்று மாத காலத்துக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்காக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் வாரிசுதாரர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் சிறப்பு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மீனவ இளைஞர்கள் விண்ணப்பத்தை பெற்று, ஜூன் மாதம் 21-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story