400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பத்ரகாளியம்மன் கோவிலில் விநாயகர் சிலை திருட்டு - பக்தர்கள் அதிர்ச்சி


400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பத்ரகாளியம்மன் கோவிலில் விநாயகர் சிலை திருட்டு - பக்தர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 30 May 2019 4:15 AM IST (Updated: 29 May 2019 11:21 PM IST)
t-max-icont-min-icon

சரவணம்பட்டியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலில் விநாயகர் சிலை திருடப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சரவணம்பட்டி,

கோவை சரவணம்பட்டி- சத்தி சாலையில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பகுதியில் பெரிய அரசமரத்தடியில் 2 அடி உயரமுள்ள கல்லால் ஆன விநாயகர் சிலை இருந்தது. கோவிலுக்குள் காவல் தெய்வமான கருப்பண்ண சாமி, அம்மனின் குதிரைகள், துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி-தெய்வானை உடனுமர் முருகப்பெருமான் ஆகியோருக்கு தனி சன்னதியும், கன்னிமார் தெய்வங்களும், சடையாண்டி சித்தர் சமாதி, 108 மணியால் செய்த சூலம், ஊஞ்சலும் உள்ளது.

இந்த அம்மன் கோவிலுக்கு கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட இந்த கோவிலில் செயல் அலுவலராக ஜெயசெல்வம், பூசாரியாக காளிதாஸ், காவலாளியாக சதீஷ் ஆகியோர் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி காளிதாஸ் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 4 மணிக்கு காவலாளி வந்து பார்த்த போது அரசமரத்தடியில் இருந்த விநாயகர் சிலை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் உமா மகேஷ்வரி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விநாயகர் சிலையை திருடி சென்றவர்களை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1 மாதத்தில் 4 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் பட்டப்பகலில் நடந்துள்ளன. தற்போது விநாயகர் சிலை திருடப்பட்டிருப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story