நெல்லை அருகே சிறுவனை கொலை செய்தது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


நெல்லை அருகே சிறுவனை கொலை செய்தது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 29 May 2019 10:30 PM GMT (Updated: 29 May 2019 6:44 PM GMT)

நெல்லை அருகே சிறுவனை கொலை செய்தது ஏன்? என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள குறிச்சிகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தளவாய். இவருடைய மனைவி சரோஜா. இவர்களுக்கு சந்தனமாரி (வயது 15), கொம்பையா (9) என 2 மகன்கள் உள்ளனர். கொம்பையா சங்கர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 26-ந் தேதி காலையில் கொம்பையா விளையாடுவதாக கூறி விட்டு வெளியே சென்றான். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொம்பையாவின் உடல் நேற்று முன்தினம் தாழையூத்து நாரணம்மாள் புரம் நான்கு வழிச்சாலை அருகே உள்ள ஒரு முட்புதரில் கிடந்தது. தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த கதிர் அடிக்கும் எந்திர டிரைவர் மாயாண்டி (20) என்பவர் சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

மாயாண்டி கடந்த 2017-ம் ஆண்டு கரையிருப்பில் ஒரு மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் 2018-ம் ஆண்டும் ஒரு மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் மாயாண்டி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மாயாண்டி பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதான மாயாண்டி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கு கொம்பையாவை நன்றாக தெரியும். ஒரே ஊர் என்பதால் அடிக்கடி அவனிடம் பேசுவேன். இதை அவனுடைய பெற்றோர் தவறாக நினைக்கவில்லை. அடிக்கடி தனிமையில் இருக்கும் போது கொம்பையாவை ஓரினச்சேர்க்கைக்கு (ஹோமோசெக்ஸ்) அழைப்பேன். அவன் வர மறுத்தான். சம்பவத்தன்று கொம்பையாவை அந்த பகுதியில் உள்ள முட்புதருக்கு அழைத்து சென்றேன். அப்போது ஓரினச் சேர்க்கைக்கு முயற்சி செய்தேன். ஆனால் அவன் மறுத்தான். மேலும் அவன், இங்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவிப்பேன் என்றான். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த கல்லை எடுத்து கொம்பையா தலையில் தாக்கி கொலை செய்தேன். அவனுடைய உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டேன்.

மேற்கண்டவாறு மாயாண்டி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாயாண்டியை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story