கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார் மங்களூரு டவுனில் பரபரப்பு


கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார் மங்களூரு டவுனில் பரபரப்பு
x
தினத்தந்தி 30 May 2019 3:30 AM IST (Updated: 30 May 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு டவுனில், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மங்களூரு, 

மங்களூரு டவுனில், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ரவுடி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பச்சநாடி பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக்(வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. மேலும் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இவரை தற்போது கொலை வழக்கு தொடர்பாக மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் தேடிவந்தனர்.

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு பச்சநாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உமர் பாரூக் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் உமர் பாரூக் பதுங்கி இருக்கும் வீட்டை சுற்றி வளைத்தனர்.

காலில் குண்டு துளைத்தது

பின்னர் அவர்கள் உமர் பாரூக்கை சரண் அடையும்படி எச்சரித்தனர். அப்போது உமர் பாரூக் வீட்டிற்குள் இருந்து கத்தியுடன் அதிரடியாக வெளியே வந்தார். அப்போது அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அந்த சந்தர்ப்பத்தில் போலீஸ்காரர் சந்தீப்பை கத்தியால் குத்திவிட்டு உமர் பாரூக் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை சரண் அடைந்துவிடும்படி கூறி மீண்டும் எச்சரித்தனர்.

ஆனால் உமர் பாரூக் தொடர்ந்து ஓடினார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், உமர் பாரூக்கை நோக்கி தனது துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டார். இதில் அவருடைய காலை குண்டு துளைத்தது. இதனால் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.

போலீஸ்காரருக்கு சிகிச்சை

இதையடுத்து போலீசார் உமர் பாரூக்கை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உமர் பாரூக் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் சந்தீப்பும் மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சம்பவ இடத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பார்வையிட்டு விசாரித்தார்.

பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story