கத்திரி வெயிலின் இறுதி நாளிலும் பெரம்பலூர்-அரியலூரில் வெயில் கொளுத்தியது


கத்திரி வெயிலின் இறுதி நாளிலும் பெரம்பலூர்-அரியலூரில் வெயில் கொளுத்தியது
x
தினத்தந்தி 29 May 2019 10:45 PM GMT (Updated: 29 May 2019 7:24 PM GMT)

கத்திரி வெயிலின் இறுதி நாளிலும் பெரம்பலூர்-அரியலூரில் கடுமையான வெயில் கொளுத்தியது.

பெரம்பலூர்,

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பெரம்பலூர்-அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. அப்போதே இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதுபோல் கடந்த 3 மாதத்திற்கு மேல் வெயிலின் தாக்கமும் எதிர்பார்த்ததை விட கடுமையாகவே காணப்பட்டது. கோடை மழையும் பெய்யாமல், பெரம்பலூர்-அரியலூர் மக்களை ஏமாற்றியது. கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடிகிறது.

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது, வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியது. தொடக்கமே அதிக வெப்பத்துடன் ஆரம்பித்த கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்தது. பெரம்பலூர்-அரியலூரில் கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து முடியும் வரை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது.

கத்திரி வெயிலின் இறுதி நாளான நேற்றும் காலை 10 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெப்பத்தின் தன்மை மேலும் கூடியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கினர். மதிய நேரத்தில் பெரும்பாலான தெருக்கள் வெறிச்சோடியே காணப்பட்டது.

வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து சென்றோர் குடை பிடித்தபடியும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் முகத்தில் துணியை கட்டிக் கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்றதை காணமுடிந்தது. பெரம்பலூர்-அரியலூரில் நேற்று கடுமையான வெயில் கொளுத்தியதோடு அனல்காற்றும் வீசியது. சாலைகளில் வெயிலின் தாக்கத்தினால் பல இடங்களில் கானல் நீர் தெரிந்தது.

அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வெயில் கொடுமையை சமாளிக்க பலர் பெரம்பலூரில் உள்ள நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்டனர். வெயிலில் சுற்றியவர்களுக்கு தாகம் அதிகமாக இருந்ததால் குளிர்ந்த பானங்களை பருகுவதற்கு அதிகமாக விரும்பினார்கள். இதனால் சாலையோரங்களில் உள்ள இளநீர், கரும்புச்சாறு, தர்ப்பூசணி, குளிர்பானங்கள், முலாம் பழம், சாத்துக்குடி பழம் ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த அளவுக்கு வெயிலின் உஷ்ணம் காணப்பட்டது. கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்ததால், இனிமேல் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பொழியுமா? என்று எதிர்நோக்கி பொதுமக்கள், விவசாயிகள் காத்திருக்கிறார்கள். 

Next Story