திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.60 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 60 லட்சம் கிடைத்தது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்துகின்ற உண்டியல் பணம் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதத்திற்கான உண்டியல் கடந்த 15-ந் தேதியும், நேற்றும் எண்ணப்பட்டன.
கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் தலைமையில், இணை ஆணையர் குமரதுரை, கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், தூத்துக்குடி உதவி ஆணையர் ரோஜாலி சுமதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் ஆய்வர்கள் பகவதி, முருகன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன், சுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள், சிவகாசி பதினெண்சித்தர் மட பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் காணிக்கையை எண்ணினர். கடந்த 15-ந் தேதி எண்ணப்பட்ட உண்டியலில் 1 கோடியே 30 லட்சத்து 95 ஆயிரத்து 484 ரூபாயும், நேற்று எண்ணப்பட்ட உண்டியலில் 1 கோடியே 16 லட்சத்து 12 ஆயிரத்து 790 ரூபாயும் கிடைத்தது.
மேலும் கோவில் தற்காலிக உண்டியலில் 24 ஆயிரத்து 443 ரூபாயும், கோசாலை உண்டியலில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 355 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில் 73 ஆயிரத்து 571 ரூபாயும், அன்னதான உண்டியலில் 10 லட்சத்து 79 ஆயிரத்து 713 ரூபாயும், சிவன் கோவில் அன்னதான உண்டியலில் 10 ஆயிரத்து 11 ரூபாயும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மொத்தத்தில் உண்டியலில் மட்டும் 2 கோடி 60 லட்சத்து 77 ஆயிரத்து 367 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். அதேபோல் 3 கிலோ 35 கிராம் தங்கமும், 20 கிலோ 855 கிராம் வெள்ளியும், 306 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story