மோடி அரசில் சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் மந்திரி ஆகிறார்


மோடி அரசில் சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் மந்திரி ஆகிறார்
x
தினத்தந்தி 30 May 2019 4:00 AM IST (Updated: 30 May 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் பிரதமர் மோடி மந்திரிசபையில் மந்திரி பதவி ஏற்கிறார்.

மும்பை,

சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் பிரதமர் மோடி மந்திரிசபையில் மந்திரி பதவி ஏற்கிறார்.

மத்திய மந்திரி தோல்வி

நாடாளுமன்ற தேர்தலை மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணியாக சந்தித்து பெரும் வெற்றியை பதிவு செய்தன. இந்த கூட்டணி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 41 இடங்களை கைப்பற்றியது. இதில் பா.ஜனதா 23 இடங்களையும், சிவசேனா 18 இடங்களையும் வென்றன.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மோடி தலைமையிலான புதிய அரசு மீண்டும் பதவி ஏற்கிறது. இந்த மந்திரி சபையில் சிவசேனாவுக்கும் இடம் கிடைக்கும் என கருதப்பட்டது. ஏற்கனவே மத்திய மந்திரி பொறுப்பில் இருந்த சிவசேனா மூத்த தலைவர் ஆனந்த் கீதே ராய்காட் தொகுதியில் தோல்வியை தழுவினார்.

இதனால் அவருக்கு பதில் சிவசேனாவில் இருந்து மந்திரி சபையில் இடம் பிடிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது.

சிவசேனா துணைத்தலைவர்

இந்த நிலையில் தென் மும்பையில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் சாவந்துக்கு இந்த முறை பிரதமர் மோடியின் மந்திரிசபையில் இடம்பிடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

68 வயதான அரவிந்த் சாவந்த் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்மும்பை தொகுதியில் போட்டியிட்ட மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவை 1 லட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்.பி.யாக தேர்வானார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கி மிலிந்த் தியோராவை 1 லட்சத்து 28 ஆயிரத்து 564 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்தார். 1995-ம் ஆண்டுவரை மகாநகர் டெலிபோன் நெட்ெவார்க் லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினீயராக பணி செய்த அரவிந்த் சாவந்த் பின்னர் விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்துவிட்டு அரசியலில் நுழைந்தார்.

இவர் தற்போது சிவசேனா கட்சியில் துணைத்தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story