தென்காசியில் பரிதாபம் பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி தந்தை படுகாயம்
தென்காசியில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி பரிதாபமாக பலியானாள். அவளுடைய தந்தை படுகாயம் அடைந்தார்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 36). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் தென்காசி அரிப்புகார தெருவில் நடந்த கோவில் கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக, தன்னுடைய மனைவி மற்றும் மகள் நந்தினிஸ்ரீ (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் நேற்று காலையில் அங்கிருந்து சுடலைமுத்து தன்னுடைய மகள் நந்தினிஸ்ரீயை மட்டும் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு, தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். தென்காசி நகரசபை அலுவலம் அருகில் உள்ள வடிகால் பாலம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நந்தினிஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானாள். படுகாயம் அடைந்த சுடலைமுத்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தென்காசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த சுடலைமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த நந்தினிஸ்ரீயின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசியில் மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற சிறுமி, விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story