நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி: 2-வது நாளில் 541 மனுக்கள் பெறப்பட்டன


நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி: 2-வது நாளில் 541 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 29 May 2019 11:00 PM GMT (Updated: 29 May 2019 8:32 PM GMT)

நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தியில் 541 மனுக்கள் பெறப்பட்டன.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று முன்தினம் தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் துரை தலைமை தாங்கினார். முதல்நாள் நடந்த ஜமாபந்தியில் ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த மங்களபுரம், மத்துருட்டு, ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி, ஆயில்பட்டி, முள்ளுக்குறிச்சி குரூப், நாரைக்கிணறு, ஊனாந்தாங்கல் குரூப், பெரப்பஞ்சோலை குரூப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்விளக்கு, பட்டா மற்றும் பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்களிடம் இருந்து 114 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை பெற்ற துணை கலெக்டர் துரை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ஜமாபந்தியின்போது மனு அளித்த ஒருவருக்கு வரி நிலுவை பாக்கி இல்லை என்று சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

நேற்று 2-வது நாள் நடந்த ஜமாபந்தியில் கார்கூடல்பட்டி பிட்-1, 2, 3 மற்றும் அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, வெள்ளக்கல்பட்டி குரூப், மூலப்பள்ளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 176 மனுக்களை அளித்தனர். கடந்த 2 நாட்களாக நடந்த ஜமாபந்தியில் 290 மனுக்கள் பெறப்பட்டதில் 6 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் ராசிபுரம் தாசில்தார் சாகுல் அமீது மற்றும் அதிகாரிகள், கிராம அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. முதல் நாளில் ஜமாபந்தி அலுவலரான திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் குறிப்பிட்ட 9 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர். இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்புகளை அகற்றிட கோருதல், குடும்ப அட்டை, அடிப்படை வசதிகள் கோருதல் என பல கோரிக்கைகளை கொண்ட 51 மனுக்கள் பெறப்பட்டன. இதில் திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேல், தனி தாசில்தார் ராஜா, மண்டல தாசில்தார் மதியழகன், வட்ட வழங்கல் அலுவலர் வேலு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று 2-வது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. இந்த ஜமாபந்தி வருகிற ஜூன் 12-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் போக 9 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும்

2-வது நாளான நேற்று ஜமாபந்தியில் மோகனூரில் 32 மனுக்களும், நாமக்கல்லில் 48 மனுக்களும், பரமத்திவேலூரில் 135 மனுக்களும், சேந்தமங்கலத்தில் 29 மனுக்களும், ராசிபுரத்தில் 176 மனுக்களும், திருச்செங்கோட்டில் 49 மனுக்களும், குமாரபாளையத்தில் 48 மனுக்களும், கொல்லிமலையில் 24 மனுக்களும் என மொத்தம் 541 மனுக்கள் பெறப்பட்டன.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்டம் முழுவதும் 477 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story