தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த புலி, மாட்டை கடித்துக்கொன்றது


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த புலி, மாட்டை கடித்துக்கொன்றது
x
தினத்தந்தி 29 May 2019 9:45 PM GMT (Updated: 29 May 2019 8:33 PM GMT)

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த புலி மாட்டை கடித்துக்கொன்றது.

தாளவாடி, 

தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேவப்பா (வயது48). விவசாயி. இவரது வீட்டையொட்டி விவசாய தோட்டம் உள்ளது. இங்கு அவர் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை அவர் தோட்டத்து நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு கொட்டகையில் கட்டிவைப்பது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் மாடுகளை கட்டிவைத்துவிட்டு இரவு தூங்க சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு மாதேவப்பா திடுக்கிட்டு எழுந்தார்.

பின்னர் டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அங்கு தோட்டத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஏதோ ஒரு உருவம் தெரிந்தது. டார்ச்லைட்டை அடித்து பார்த்தார். அப்போது புலி நிற்பது தெரியவந்தது. வெளிச்சம் பட்டதும் புலி அங்கிருந்து ஓடியது. இதனால் பயந்த மாதேவப்பா வீட்டுக்குள் சென்று விட்டார். அதன்பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தார். அப்போது மாடு கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புலி தோட்டத்துக்குள் புகுந்து மாட்டை கடித்துக்கொன்றுள்ளது. மாதேவப்பா டார்ச் லைட்டை அடித்ததும் அந்த வெளிச்சத்தை கண்ட பயத்தில் வனப்பகுதிக்குள் புலி ஓடிவிட்டது. இல்லையென்றால் கடித்துக்கொன்ற மாட்டின் இறைச்சியை தின்றிருக்கும்.

இதுகுறித்து மாதேவப்பா தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு வந்து அந்த பகுதியில் பதிவான புலியின் கால்தடத்தை ஆய்வு செய்து பார்த்தனர். தோட்டத்தில் புகுந்து புலி அட்டகாசம் செய்ததால் எங்கு மீண்டும் வந்துவிடுமோ? என்ற பயத்தில் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வெப்பம் தாங்காமல் அங்குள்ள புலிகள் கும்டாபுரம் அருகே தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் உள்ள கர்நாடக வனப்பகுதிக்குள் வந்துள்ளது. அந்த புலிகள் தான் வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது’ என்றனர்.

Next Story