கடன் தொல்லையால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை


கடன் தொல்லையால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 30 May 2019 3:15 AM IST (Updated: 30 May 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் அரசு பஸ் டிரைவர் எலிமருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.

அரியாங்குப்பம், 

அரியாங்குப்பம் புதுக்குளம் கென்னடி நகரை சேர்ந்தவர் நீதிநாதன் (வயது 55). புதுவை அரசு போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி) பஸ் டிரைவர். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

போக்குவரத்து துறையில் சரியாக சம்பளம் வழங்காததால் நீதிநாதன், குடும்ப செலவுக்கு பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மகளின் திருமண செலவுக்கு வாங்கிய கடனையும் அவரால் அடைக்க முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் நீதிநாதன் மனமுடைந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து தின்று வீட்டில் நீதிநாதன் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நீதிநாதன் பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நீதிநாதன் சிகிச்சைபெற்றபோது, அவரை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சென்றுபார்த்தனர். அப்போது ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தீர்கள் என்று நீதிநாதனிடம் கேட்டபோது, ‘பி.ஆர்.டி.சி.யில் சம்பளம் போடாததால் என்னால் வாழ முடியவில்லை. கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாததால் இந்த முடிவை எடுத்ததாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவர்களில் பல குடும்பங்கள் வறுமையில் வாடுவதால் ஊழியர்களின் நலனை கருதி விரைவில் சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பி.ஆர்.டி.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story