தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கூடாது ராகுல்காந்திக்கு புதுவை காங்கிரஸ் வலியுறுத்தல்


தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கூடாது ராகுல்காந்திக்கு புதுவை காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 May 2019 4:15 AM IST (Updated: 30 May 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்யக் கூடாது என்று புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி, 

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று காலை வைசியாள் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய செயலாளரும், புதுவை மாநில பொறுப் பாளருமான சஞ்சய்தத், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தியாக தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் ஒப்பற்ற தலைவராக ராகுல்காந்தி தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். அவருடைய தலைமையில் தான் வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சி புதிய எழுச்சி பெறும். எனவே ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது. அந்த முடிவை திரும்ப பெற வேண்டும். ராகுல்காந்திக்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும்.

இதற்கிடையே கட்சியின் அகில இந்திய செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான சஞ்சய்தத் நேற்று முன்தினம் இரவு புதுவையில் தங்கி இருந்தார். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனியாக சந்தித்து தங்களுக்கு சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சிலர் தற்போதுள்ள அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

Next Story