காவலர் பணிக்கான வயது வரம்பு 24 ஆக உயர்வு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு
புதுவையில் காவலர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 24 ஆக உயர்த்தி முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
இது தொடர்பாக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி காவல்துறையில் காவலர் பணியில் 390 இடங்களை நிரப்புவதற்காக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நியமன விதிகளின்படி காவலர் தேர்வுக்கான வயது 18 முதல் 22 ஆகும். இந்த வயது வரம்பை தளர்த்தி 24 வயதாக உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள், இளைஞர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. அதன்பின் இந்த கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வயது வரம்பை உயர்த்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை கவர்னருக்கு அறிவுறுத்தியது. அதன்பிறகும் கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே கவர்னரின் அதிகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு பின்னர் புதுவையில் காவலர் பணிக்கான வயது வரம்பை 24 ஆக உயர்த்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். 22.9.2018 தேதியன்று 24 வயது வரை உள்ள பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்பட பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வயதில் இருந்து கூடுதலாக 2 வயது உயர்த்தப்பட்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது. காவலர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியும் 1 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story