மீஞ்சூர் அருகே அனுமதியின்றி நிலத்தடி நீர் விற்பனை; பொதுமக்கள் போராட்டம்


மீஞ்சூர் அருகே அனுமதியின்றி நிலத்தடி நீர் விற்பனை; பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 May 2019 4:30 AM IST (Updated: 30 May 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அடுத்த விச்சூர் கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் அரசுக்கு சொந்தமான இடங்களில் நிலத்தடி நீரை திருடி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர், 

மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை ஊராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டிற்கு பிறகு சரியான அளவில் மழை பெய்யாததால் கொசஸ்தலை ஆறு வறண்டு கிடப்பதுடன் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து கொண்டே அதிக ஆழத்திற்கு செல்கிறது.

இதனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் இதே பகுதியில் அதிகமான ஆழத்திற்கு அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத மின் மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை தனியார் சிலர் உறிஞ்சி எடுத்து லாரிகள், டிராக்டர்கள் மூலம் விற்பனை செய்கிறார்கள்.

தினமும் இந்த கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். அரசு அனுமதி இல்லாமல் அரசு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை திருடுகின்றனர். இதனை தடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்பட பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

இதனை கண்டிக்கும் வகையில் விச்சூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பகுஜன்சமாஜ் கட்சி மாவட்டத்தலைவர் சங்கர் மற்றும் பெண்கள், பொதுமக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து பொன்னேரி தாசில்தார் (பொறுப்பு) சங்கிலிரதி, மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் ஜூலியட் விமலா, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சி செயலாளர் கிறிஸ்டியன் மற்றும் மணலி புதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட தாசில்தார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story