டாஸ்மாக் கடை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


டாஸ்மாக் கடை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 30 May 2019 3:30 AM IST (Updated: 30 May 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் சத்தரை கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக மதுக்கடை அருகே உள்ள ஒரு வேப்ப மரத்தில் ஆண் பிணம் ஒன்று தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது. இதை கண்டு அங்கு இருந்தவர்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் பேரம்பாக்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த மணி (வயது45) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மணியின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மல்லிகா (35) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மல்லிகா கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் நேற்று முன்தினம் தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி சரவணன் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story