கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், வேலைவாய்ப்புக்கான படிப்புகள் தொடங்கப்படும் - புதிய துணைவேந்தர் பேட்டி
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கான படிப்புகள் தொடங்கப்படும் என்று புதிய துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் கூறினார்.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் உள்ள அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பதிவாளர் சுகந்தி, பேராசிரியைகள், அலுவலர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அன்னைதெரசா பல்கலைக்கழகத்தை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகளின் திறனை வளர்ப்பதற்கும், மருத்துவம் சார்ந்த படிப்புகள், வேலைவாய்ப்புகள் வழங்கும் படிப்புகள் ஆகியவை தொடங்கப் படும். மேலும் சர்வதேச தரம் வாய்ந்த படிப்புகள் தொடங்கி, வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். அதன் மூலம் மாணவிகள் 6 மாதம் வரை வெளிநாட்டில் கல்வி பயில ஊக்குவிக்கப்படுவார்கள்.
பகுதிநேர கல்விகள் கற்றுத் தருவதுடன், அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழகம் சார்பில் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
பல்கலைகழகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து பேராசிரியைகளுடன் கலந்து ஆலோசனை செய்து, விரிவான அறிக்கை கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story