சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘ஏ.சி.’ பயன்பாடு குறைப்பு தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி
தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையில் உள்ள சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் குளிர்சாதன (‘ஏ.சி.’) பயன்பாடு குறைக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட 32 ரெயில் நிலையங்களில் 19 ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது குளிர்சாதன பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தண்ணீர் விலைக்கு வாங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரெயில் நிறுவனம் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை கட்டுப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தினசரி 2 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுரங்கப்பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதிக்காக (‘ஏ.சி.’) பயன்படுத்தப்படுகிறது. மீதம் உள்ள தண்ணீர் உயர்த்தப்பட்ட பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக ஒவ்வொரு சுரங்க ரெயில் நிலையங்களிலும் தினசரி 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இதில் அதிகாலை 4.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை தொடர்ந்து குளிர்சாதன பயன்பாட்டுக்காக தினசரி 7 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது. உயர்த்தப்பட்ட பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் குளிர்சாதன வசதிக்காக செலவிடப்படுகிறது. தேவைப்படும் தண்ணீர் முழுவதும் சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து வாங்கப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தண்ணீர் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு களத்தில் இறங்கி உள்ளது.
இதற்காக குளிர்சாதன எந்திரத்தின் செயல்பாடுகளை படிப்படியாக குறைத்து வருகிறது. குளிர்சாதன பயன்பாடு குறைப்பு நடவடிக்கை தற்காலிக ஏற்பாடு தான். தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியதும் பழைய முறைப்படி குளிர்சாதன பயன்பாடு அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story